Monday, 14 May 2012

பரிசுத்த ஆவி ஆலயம், வேம்பார்

- மோ. நேவிஸ் விக்டோரியா


.

தென்தமிழ்நாட்டில் முத்துக்குளித்துறை என்றும் பெஸ்காரியா என்று போர்ச்சுகீசியர்களாலும் அழைக்கப்பட்ட கடலோரக் கிராமங்களான வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், ஆலந்தலை, மணப்பாடு மற்றும் அதனைச்சார்ந்த சிற்றூர்களில் வாழ்ந்து வந்த பரதவ மக்கள் 1536- 37 ம் ஆண்டு போர்ச்சுகீசியர்களின் ஆதரவோடு கிறிஸ்தவ மறையை தழுவினர்.

      1542 ம் ஆண்டு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆன்மீகப் பணியாற்றிட முத்துக்குளித்துறைக்கு வந்தார். பலமுறை வேம்பாருக்கு வந்து மறைபணியாற்றியதையும் , இவ்வூர் மக்களிடம் மிகுந்து அன்பு கொண்டிருந்ததையும் அவர் எழுதிய கடிதங்கள் வாயிலாகவும், வரலாற்று ஆவணங்கள் மூலமும் அறிய முடிகிறது. கிறிஸ்தவர் வழிபாட்டிற்காக ஒவ்வொரு ஊரிலும் புனித சவேரியாரின் விருப்பப்படி கூரைக்கோவில் கட்டப்பட்டது.
தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் புத்தகத்தை வெளியிட்டவரும் , வேம்பாரின் ஆன்மீக குருவானவராக இருந்தவருமான ஹென்றிக்ஸ் அடிகளார் 1548ம் ஆண்டு உரோமையிலிருந்த இயேசு சபைத்தலைவர் புனித இஞ்ஞாசியாருக்கு எழுதிய கடிதத்தில் வேம்பார் ஆலயத்தில் ஞாயிறு‌தோறும் கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கி வருவதாகவும், மக்கள் ஆர்வமுடன் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
           1599 ம் ஆண்டு முதன்முதலாக பெரிய கற்கோவில் கட்டப்பட்டது. 1600 ம் ஆண்டு வெளியான இயேசு சபையினர் அறிக்கையில் கடற்கரை கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஆலயங்களில் வேம்பார் ஆலயம் தான் பெரியதாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேம்பாரின் பங்குத்தந்தையாக இருந்த ஆன்ட்ரூ லோபஸ் அடிகளார் 1644 ம் ஆண்டு எழுதியுள்ள மடலில் இந்த ஆலயம் இஸ்பிரித்து சாந்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், 1300 கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.
பதினாறாம் நூற்றாண்டின் கடைசியில் இயேசு சபையினரின் தலைமை இல்லம் தூத்துக்குடியிலும், துணை இல்லங்கள் வேம்பார், புன்னைக்காயல், மணப்பாடு ஆகிய ஊர்களிலும் செயல்பட்டு வந்தது.
1658 ம் ஆண்டு ஹாலந்து நாட்டைச்சேர்ந்த டச்சுக்காரர்கள் முத்து குளித்துறையை கைப்பற்றினர். இவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கு எதிரான பிரிவினை சபையை சார்ந்தவர்கள். வேம்பார் ஆலயத்தின் முகப்பு மற்றும் பீடத்தை இடித்து விட்டு அவர்களது தளவாட கிடங்காக மாற்றி விட்டனர். காலப்போக்கில் இம்மக்களின் மீதான தாக்கம் குறைந்து , முத்துக்குளித்தல் மற்றும் அதன் தொடர்பான வியாபாரங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
ஐம்பது ஆண்டுகள் கழித்து அதாவது 1708 ம் ஆண்டு மனுவேல் கர்னியாரோ வேம்பாரின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1713 ம் ஆண்டு வேம்பாரின் பங்கு தந்தையான ஜோசப் காலினி தனது மடலில் பெரிய கோவில் மிகவும் சிதிலமடைந்து அழிந்து வருவதாக எழுதியுள்ளார். இதன் பிறகு அதாவது 1720 ம்‌ ஆண்டுவாக்கில் இரண்டாவது கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
1709 ம் ஆண்டு கொடிய பிளேக் நோய் வேம்பாரைத் தாக்கியது. பங்கு தந்தை மனுவேல் கர்னியாரோ உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த வருடம் , 1710 ம் ஆண்டு மறவர் படையெடுப்பு நடந்தது. கடும் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பஞ்சம், படை, கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட இவ்வூர் மக்கள் புனித செபஸ்தியாரை தங்கள் பாதுகாவலராக தேர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு பல ஆண்டுகளுக்கு முன் வேம்பாரில் பங்கு குருவாக பணியாற்றிய ‌ஹென்றிக்ஸ் அடிகளார் தான் எழுதிய அடியார் வரலாறு என்ற புத்தகத்தில் புனித செபஸ்தியாரிடம் வேண்டிக்கொண்டால் அவைகள் நீங்கிப்போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நோக்கும்போது ஏறத்தாழ 1711- 1712 ம் ஆண்டிலேயே இவ்வூர் மக்கள் தங்களை புனித செபஸ்தியாரின் பாதுகாவலில் ஒப்படைத்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. நாளடைவில் அவர் மீதிருந்த பக்தி முயற்சிகள் விரிவடைந்திருக்கிறது.
இரண்டாவது கட்டப்பட்ட ஆலயம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‌‌சேதமடைய ஆரம்பித்தது. புதிய ஆலயம் கட்டுவதற்கான அஸ்திவாரம் 1908 ம் ஆண்டு இடப்பட்டது. 1915 ம் வருடம் பெப்ருவரி மாதம் முதல் தேதியன்று பங்குத் தந்தை சுவாமிநாதர் முன்னிலையில், திருச்சி ஆயர் வந்திக்கத்தக்க அகுஸ்திஸ் பெசாந்தியார் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்நாட்களில் தெற்கே புதுக்கோட்டை , தருவைக்குளம் மேற்கே மணியாச்சி, கொம்பாடி வடக்கே புதூர், நாகலாபுரம் என 25 ஊர்கள் இணைந்த பெரிய வேதபோதக தளமாக வேம்பார் விளங்கியது. 1914 ம் ஆண்டு வேம்பாரில் 4,744 கிறிஸ்தவர்கள் வசித்து வந்ததாக இயேசு சபை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி:
குலோபல் பரவர்

No comments:

Post a Comment